Monday, April 26, 2010

என் மரணம்!















என் மரண வீட்டுக்கு
வர வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட
உங்களைப் பார்த்து
புன்னகைக்க முயற்சிக்கிறேன்!
நீங்கள் நிற்பது பற்றியும்
இருப்பது பற்றியும்
இன்னும் முடிவெடுக்கவில்லை
என்பது புரிகிறது!
நானும் தான்!

உங்களை வரவேற்பது குறித்து
சொல்லிவிட மறந்துவிட்டேன்;
இப்போதும் தாமதமாகவில்லை!
ஆனால் பூக்களின் மென்மையும்
மெத்தையின் சுகமும்
தடுத்துக் கொண்டிருக்கின்றன
எழும்புவதிலிருந்து;
முதன் முறையாக
அனுபவிப்பதால் இருக்கும்!
மன்னித்துவிடுங்கள்;
நாளை உங்களின் விமர்சனம்
இதைத் தவிர்த்து
வெளி வரட்டும்!

உச்சத்தில் அழும்
அவள் குறித்து
எனக்கு எந்தவித
பிரக்ஞைகளும் இல்லை;
என் அம்மாவாக இருக்கலாம்
நீங்கள் யோசிக்காதீர்கள்!
ஒரு கிழமை அதிகம்;
பிறகு சாப்பிடத்தான் வேண்டும்!

உங்கள் விசயத்துக்கு வருவோம்;
நீங்களும் பாவம்;
கறுப்பு ஆடைக்கும்
கொத்துப் பூவுக்கும்
அவகாசமில்லாமல்
அவதிப்படலாயிற்று!
கூடவே கண்ணீருக்கும்;
நீங்கள் எங்கே தான்
போவீர்கள்;

நேற்றைய எனக்கும்
இன்றைய உடலுக்கும்
அடையாளங் கண்டு தோற்று
பிதற்றத் தொடங்கியிருக்கிறீர்கள்;
"நல்ல ஆத்மா"
சிரிப்பு வருகிறது!
உதடுகள் அசைவதை
நீங்கள் கவனிக்கவில்லை
என்னை புறக்கணிப்பது
எப்போதும் இலகுவாக இருக்கிறது
உங்களுக்கு!

உங்கள் கண்ணீரின் ஈரம்
சீக்கிரம் காய்வது குறித்து
விசனமுறத் தொடங்கியிருக்கிறீர்கள்!
இதற்கும் ஒரு விதி
நேற்றே செய்திருக்கலாம் என்று
நீங்கள் யோசிப்பது புரிகிறது;
எனக்கெங்கே தெரியும்
இன்று இங்கே கிடப்பேனென்று
எல்லோரும் இதைத்தானே
இலகுவாக மறக்கிறோம்!

நான் உங்களுக்கு
என்ன செய்திருக்கிறேன்
என்பது நினைவிலில்லை;
நான் இந்த சமூகத்தில்
பிறப்பிக்கப்பட்டவள்!
விதிகளால் வளர்க்கப்பட்டவள்!
தீயதை நினைவுபடுத்துதல்
அந்த ஆயிரங்களில் ஒன்று!

சரி விடுங்கள்!
உங்களை நினைவுபடுத்தலாம்!
மூலையில் நிற்பவளுக்கும்
எனக்குமான வஞ்சம்
தீர்க்கப்படாது கிடக்கிறது!
ஆசைப் புதைகுழியில்
அமிழ்த்தப்பட்டு நிற்கிறது
பகிரப்பட்ட அன்பு!
ஈரமான காதல் கனவுகளுடன்
அங்கேயே திரிகிறது மனது!

ஏதோவொன்றுக்கான ஆதங்கத்தில்
எறியப்பட்டுக் கிடக்கிறது உயிர்!
அதோ! அந்தரத்தில்!
கடக்கப்பட்ட தருணங்களின்
கழிவுகளில் தொலைந்த
பாதி வாழ்க்கை
எரிந்து கொண்டிருக்கிறது
இதோ! இங்கே!
சாம்பலுடன்;
சாம்பிராணிக் குச்சி!

நான் போகவேண்டும்;
இப்போது!
எங்கேயோ!
உங்கள் அரிதாரத்தை
இங்கே வீணாக்காதீர்கள்!
நாளை நான் மீளப்
பிறக்கப் போவதில்லை!
வாழ்க்கை இனியில்லை!
இதற்குப் பிறகில்லை!


படித்ததில் பிடித்தது

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?